பிகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் இன்று காலை தொடங்கியது. 1940ஆம் ஆண்டுக்கு பிறகு, பிகாரில் நடைபெறும் முதல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த 2023-ல் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன், அங்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தை தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டு, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல், பிகாரிலும் இந்த மாநாடு வெற்றிக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.