லிங்கத்தை தொட்டு பூஜை செய்யும் பெண் அர்ச்சகர்கள்! - சத்தமின்றி சமூக மாற்றத்தை நிகழ்த்திய சத்குரு!

புதன், 25 அக்டோபர் 2023 (15:05 IST)
பெண் தெய்வங்கள் அதிகம் நிறைந்த நம் தேசத்தில் பெண்கள் அர்ச்சர்கர் ஆவது இன்றும் மிக பெரும் சவாலாக உள்ளது. கடந்த மாதம் தான் தமிழகத்தில் முதல்முறையாக 3 பெண்கள் கோவில் அர்ச்சகர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.


 
இந்த செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதை தனது அரசின் மிகப்பெரிய பெருமையாக குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ‘கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்’ என புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

பல ஆண்டு சட்டப் போராட்டங்களுக்கு பிறகே அந்த 3 பெண்களுக்கும் இந்த வாய்ப்பு சாத்தியமாகி உள்ளது. ஆனால், இந்த சமூக மாற்றத்தை 13 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்த்தி காட்டியுள்ளார் சத்குரு. கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அவர் பிரதிஷ்டை செய்துள்ள லிங்கபைரவி சந்நிதியில் சுமார் 30 பெண்கள் அர்ச்சகர்களாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்து வருகின்றனர்.

இது குறித்து அறிந்து கொள்வதற்காக அங்கு ‘உபாசகா’ என்ற பெயரில் பெண் அர்ச்சகராக இருக்கும் திருமதி. மாலினி அவர்களிடம் பேசினோம். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் 2018-ம் ஆண்டு முதல் லிங்கபைரவி சந்நிதியில் சேவை செய்து வருகிறார்.

கோலாகலமாக நடைபெற்று வரும் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு மத்தியில் நம்மிடம் பேசிய அவர்  “லிங்கபைரவி தேவிய சத்குரு 2010-ம் வருசம் பிரதிஷ்டை பண்ணாங்க. இந்த தேவிய பெண் தன்மையின் உச்சப்பட்ச சக்தியின் வெளிப்பாடுனு சொல்லுவாங்க. அதுனால, தேவி சந்நிதிய முழுக்க முழுக்க பெண்கள் தான் பார்த்துகிறோம். கருவறையிலயும் பெண்கள் தான் பூஜை பண்றோம். இப்போ மொத்தம் 10 ‘பைராகினி மா’க்களும், 20 ‘உபாசகா’க்களும் இருக்காங்க.

பைராகினி மா-னு சொல்றவங்க சந்நிதி சம்பந்தப்பட்ட எல்லா சடங்குகளையும் முழு நேரமா பார்த்துப்பாங்க. என்னைய மாதிரி இருக்குற ‘உபாசகா’க்கள் ஈஷாவுல இருக்குற வேற சமூக நலப் பணிகளையும் பண்ணிட்டு சந்நிதியில சேவையும் பண்ணுவோம்” என கூறினார்.

அங்கு நடக்கும் சடங்குகள் குறித்து மாலினி அவர்கள் கூறுகையில், ‘இங்க பிறப்புல இருந்து இறப்பு வரைக்கும் ஒரு மனிதனோட வாழ்வில ஏதெல்லாம் முக்கியமான அம்சமா இருக்கோ அதுக்கெல்லாம்  சடங்குகள் பண்றோம். பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கிறது, காது குத்துறது, வித்யாரம்பம் பண்றதுனு நிறைய சடங்குகள நாங்க பண்ணி வைக்கிறோம். குறிப்பா, நிறைய கல்யாணங்கள இங்க நாங்க நடத்தி வைக்கிறோம். இறந்தவங்களுக்கு பண்ற கால பைரவ கர்மா சடங்கும் தேவி சந்நிதியில தான் நடக்கும்’ என்றார்.

பெண்களை கருவறைக்குள் அனுமதித்ததே பெரிய சமூக மாற்றம் என எண்ணி கொண்டிருக்கும் போது அதை விட மிகப்பெரிய விஷயம் ஒன்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மாலினி.

"ஈஷாவுல ஜாதி, மத பாகுபாடுங்கிறது எந்த விஷயத்துலயும் இல்ல. யோகா கத்துக்கிறதுக்கு மட்டுமில்ல, லிங்கபைரவி சந்நிதியில பூஜை பண்றவங்கள்ல கூட வேற வேற ஜாதிய சேர்ந்தவங்களும், வேற மதத்த சேர்ந்தவங்களும் இருக்காங்க. உதாரணத்துக்கு லெபனான், அமெரிக்காவுல கிறிஸ்தவ குடும்பத்துல பிறந்து வளர்ந்தவங்க, பாலீஸ்தீன்ல இருந்து வந்தவங்க, வட இந்தியாவைச் சேர்ந்தவங்கனு எந்த பாகுபாடும் இல்லமா பெண்கள் அர்ச்சகர்களாக இருக்காங்க. ஜாதி, மதம்லா சமூகத்துக்கு வேணா ஏதோ ஒரு வகையில தேவைப்படலாம். ஆனா, ஆன்மீக பாதையில இருக்கவங்களுக்கு இது பொருட்டே இல்ல” என்று மிகப்பெரும் புரட்சி தத்துவத்தை மிக எளிமையான வார்த்தைகளில் சொல்லி கடந்தார்.

லிங்கபைரவி கோவிலில் எந்த தகுதியின் அடிப்படையில் பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு, “நெஞ்சுல கொளுந்துவிட்டு எரியுற பக்தி, துளியும் தடம்பிறளாத நேர்மை, எனக்கு என்ன கிடைக்குங்கிற எதிர்பார்ப்பு இல்லாத முழு அர்ப்பணிப்பு உணர்வு...இது தான் தகுதிங்க. இது இருந்தா போதும்” என்றார்.

தமிழக அரசின் 3 பெண் அர்ச்சகர் நியமனம் குறித்து கேட்டப்போது, “இது ஒரு வரவேற்கத்தக்க அம்சம். 3 பேரு பத்தாது. இன்னும் நிறைய பேர் பெண் அர்ச்சகர்களா வரணும். எங்களுக்கு கிடைச்ச பாக்கியம்னா அது சத்குரு தான். பெண்கள் அர்ச்சகர் ஆகணும்னா தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டி இருக்கு, நாடாளுமன்றத்துல பெண்கள் எம்.பி. ஆகுறதுக்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டி இருக்கு. இப்படி பெண்களுக்கு சம உரிமை வழங்குற சமூக மாற்றங்கள் எல்லாம் பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் நிகழுது. ஆனா இங்க ஈஷால பாருங்க. இந்த சமூக மாற்றங்கள எல்லாத்தையும் சத்குரு சத்தமே இல்லாம பல வருசத்துக்கு முன்னாடியே பண்ணி காமிச்சிட்டாரு. அவரு இல்லனா எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சுருக்காது. அவருக்கு என்னோட மனமார்ந்த நன்றி”னு கூப்பிய கரங்களுடன் பக்தி ததும்ப தன் நன்றியை வெளிப்படுத்தினார் மாலினி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்