இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 18 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் தென்னை பயிரிட்டாலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மட்டுமே 92 சதவீத தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மிகவும் குறைவாகவே செய்யப்படுகிறது.
நம் நாட்டிலிருந்து அதிக அளவு தேங்காய் எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதாக ஒரு தவறான தகவலின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டில்- குறிப்பாக தமிழகத்தில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், தமிழக தென்னை விவசாயிகள் வாழ்வில் வசந்தம் பிறக்கும். தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி, அவர்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டிருக்கும் தற்கொலைகளை நிச்சயமாக தடுக்கும் என்று தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.