தமிழகம் முழுவதும் யூரியா உரம் தட்டுப்பாடு, நெற்பயிர் வளர்ச்சி பாதிப்பு

வியாழன், 20 நவம்பர் 2014 (13:27 IST)
தமிழகம் முழுவதும் தற்போது யூரியா உரம் தட்டுப்பாடாக இருப்பதால், நெற்பயிர் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்த இரட்டை படை மதகு பாசன பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்து 3500 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டுள்ளனர்.
 
இதே போல், பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், இப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் காவிரி பாசனப் பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான ஏக்கரில் நடப்பு ஆண்டில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டுள்ளனர்.

 
நடவு செய்யப்பட்ட நெற்பயிர் செழிப்பாக வளர, மேல் உரமாக யூரியா கொடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏக்கர் ஒன்றுக்கு 150 கிலோ அதாவது மூன்று மூட்டை யூரியாவை விவசாயிகள் கொடுப்பார்கள் ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் யூரியாவிற்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு மூட்டை யூரியா கூட வாங்க முடியவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
 
அரசு விவசாயிகளுக்குத் தேவையான உரங்களைத் தயார் செய்து வைக்கத் தவறிவிட்டது எனக் கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்