ஜெ.விற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அனைவரும் கேட்க முடியாது : நீதிமன்றம் அதிரடி

வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:25 IST)
முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தகவல் வெளியிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் செய்திகள் வெளியிட்டது.
 
அவருக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆகியோரும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு புறம், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளி வந்தாலும், அவரின் உடல் நிலை குறித்து வெகு நாட்களா அப்பல்லோ நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளிவிடவில்லை.
 
எனவே, முதல்வரின் உடல்நிலை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று கூறி, சென்னையை சேர்ந்த மருத்துவர் பிரவீணா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாநில முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தகவல் வெளியிட வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
இதற்கு முன், இதே காரணத்திற்காக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்