தமிழக அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரன் தரப்பும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின், பொதுக்குழுவை கூட்டுவது, சசிகலாவை நீக்குவது என பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருகிறார். சசிகலாவை நீக்கியதன் மூலம், கட்சி மற்றும் ஆட்சியின் கட்டுப்பாடு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் வசம் வந்துள்ளது. சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஏறக்குறைய எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றே தெரிகிறது. அதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுவிட்டால், தினகரன் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள், தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என எடப்பாடி தரப்பு நம்புகிறது.