ஈரோட்டில் திமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மத்திய பாஜக அரசு தமிழகத்தை வேண்டுமென்றே வஞ்சிக்கிறது, திட்டமிட்டு இந்தியை திணிக்கிறது என்றார். மேலும், பாஜக-வால் எக்காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சி கலையும். இதனையடுத்து முழு பலத்துடன் திமுக ஆட்சியில் அமரும் என்றார். மேலும், நாங்கள் நினைத்திருந்தால் சொடக்கு போடும் நேரத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும் எனவும் அவர் பேசினார்.
இந்நிலையில், கோவையில் 86 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி “ஆட்சியை ஒரு சொடக்கில் கவிழ்த்து விடுவோம் என ஸ்டாலின் பேசியிருக்கிறார். கடப்பாரை போட்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது” என பதிலடி கொடுத்தார்.