இன்ஜினீயரிங் விண்ணப்பங்களை 27-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்
செவ்வாய், 20 மே 2014 (10:54 IST)
இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை 27-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி இன்ஜினீயரிங் கல்லூரிகள் 570 உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர்வதற்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் கடந்த 3-ம் தேதி முதல் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 500 விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்பிக்கவும் இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அவர்கள் ஏற்கனவே வாங்கிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்ட கியூ வரிசையில் நின்று கொடுத்தனர். சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு வெளியாகவில்லை. அந்த முடிவு 26-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று இன்ஜினீயரிங் விண்ணப்பங்களை வழங்குவதற்கான தேதியையும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கும் தேதியையும் 27-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது. எனவே மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை 27-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கவும் அன்றுதான் கடைசி நாள்.
இன்ஜினீயரிங் விளையாட்டு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு அவர்கள் விளையாட்டின் மூலம் கிடைத்த சான்றிதழ் முக்கியமானது. அந்த சான்றிதழ்களை கொண்டு அவர்களுக்கு எத்தனை மதிப்பெண் என்று நிர்ணயிக்க முடிகிறது.
அவ்வாறு அவர்களுக்கு மதிப்பெண் கிடைப்பதை உறுதி செய்து அவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விளையாட்டில் சிறந்து விளங்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கள் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். இதற்காக ஒரு குழுவினர் விளையாட்டு சான்றிதழ்களை சரிபார்த்து பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் இவர்கள் அனைவருக்கும் தரப்பட்டியல் வெளியிடப்படும். பின்னர் கலந்தாய்வு நடக்கும். பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ளும் இன்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் அறிவிக்கவில்லை.