தமிழ்நாட்டில் மலைவாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளில் பலர் மது வாங்கி குடித்து விட்டு பாட்டில்களை காட்டில் வீசியெறிவதால் சுற்றுசூழல் பாதிக்கபடுவதாக புகார் இருந்து வந்தது.
இதனால் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ரூ.10 அதிகம் விலை வைத்து விற்பதும், காலி பாட்டில்களை திரும்ப தந்தால் ரூ.10 திருப்பி அளிக்கப்படும் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விளக்கமளித்துள்ள தமிழக அரசு ”மலைப்பகுதிகளில் உபயோகிக்கப்பட்ட 74 சதவீத மதுப்பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மலைப்பகுதியில் 7, 8 மதுக்கடைகள் மட்டுமே இருப்பதால் பாட்டில்களை திரும்ப பெறும் செயல்முறை எளிதாக உள்ளது. ஆனால் மாநில அளவில் இதை செயல்படுத்துவது கடினம்.
மதுபானக்கடைகளில் பாரில் அமர்ந்து மது அருந்துபவர்களிடம் பாட்டிலை திரும்ப பெறலாம், ஆனால் வீட்டிற்கு வாங்கி செல்பவர்களிடம் திரும்ப பெறுவது சிரமமானது. மாதம்தோறும் 51 கோடி மதுபாட்டில்கள் விற்பனையாகிறது” என கூறியுள்ளது.
பின்னர் “51 கோடி மதுபாட்டில்கள் ஏற்படுத்தும் சுற்றுசூழல் பாதிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.