வரும் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிரது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் பணம் பட்டுவாடா நடந்துள்ளதாகவும், இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக உள்ளதாகவும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பத்ரா நேற்று அரசியல் தலைவர்களை அழைத்து தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பத்ரா, ராஜேஷ் லக்கானியுடன் தலைமை செயலகத்தில் தீவிர ஆலோசனையில் நடத்தி வருகிறார்.
பணப்பட்டுவாடா புகார் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இம்முறை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.