அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஜீன் 13 தேர்தல் இல்லையாம்

சனி, 28 மே 2016 (15:26 IST)
அரவகுறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் ஜீன் 13ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால், வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
 
இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது,  ஜீன் 13ஆம் தேதி அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
 
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆலோசித்து இறுதி முடிவெடுக்க அறிவுறுத்தியது. மேலும், ஜீன் 1ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யாவும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
 
ஆனால், எதற்கும் அசையாத தேர்தல் ஆணையம், அந்த இரண்டு தொகுதிகளிலும் ஜீன் 13ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் நிலைமை சீரான பின்னர்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
 
அந்த இரண்டு தொகுதிகளிலும், அரசியல் கட்சிகள் வாக்களர்களுக்கு பணத்தை அள்ளி இரைத்திருப்பதாகவும், எனவே தற்போது தேர்தல் நடத்தினால் அது நியாமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில், தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது இதுதான் முதல் முறையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்