3 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்: ஈபிஎஸ்

Siva

திங்கள், 21 அக்டோபர் 2024 (07:56 IST)
திமுக ஆட்சி அமைத்த மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்த மூன்று ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாங்கியுள்ளார் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற கட்சி விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், அதிமுக இரண்டாகப் பிரிந்து விட்டது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்; அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. வேண்டுமென்றே கட்சியை திட்டமிட்டு பிளவுபடுத்த திமுக நாடகம் ஆடுகிறது என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டனுக்கூட உயர் பதவிக்கு வர முடியும், விசுவாசமாக இருப்பவர்களும் உழைப்பவர்களும் பதவி பெறும் ஒரே கட்சி அதிமுகதான் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணி கட்சிகளை தாங்கி தான் இருக்கிறது, ஆனால் அதிமுக சொந்த காலில் தான் இருக்கிறது. சொந்த காலில் நிற்கிறவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுகவிற்கு மக்களிடம் செல்வாக்கு சரிந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார், தமிழகத்தில் 64% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மன்னராட்சி வேண்டுமா மக்களாட்சி வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்."


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்