நான் சொல்வதைத்தான் செய்வேன்... எடப்பாடியார் பேச்சு!

புதன், 24 பிப்ரவரி 2021 (13:08 IST)
ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

 
சேலம் மாவட்டம் கருமந்துறையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கலப்பின பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் தலைவாசலில் அமைந்துள்ள கால்நடைப் பூங்கா - மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தெரிவித்தார். 
 
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது இதில் புதிதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 
 
தொடர்ந்து, கால்நடை கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆணைகளை  முதலமைச்சர் வழங்கினார். இநிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிக அளவில் பால் உற்பத்தியை தரும் பசுக்களை உருவாக்க விவசாயிகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 40 லிட்டர் வரை பால் கொடுக்கும் கலப்பின பசுக்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, 
 
சேலம் மாவட்டம் கருமந்துறையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கலப்பின பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நவீன விஞ்ஞான முறையில் கால்நடை வளர்ப்பினை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் 46 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கால் நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த வழியில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த விலங்கின ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவ கல்லூரி, ஆகியவை சுமார் 1023 கோடி செலவில மிக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிக பெரியதாக 1002 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.
 
திமுக தலைவர் ஸ்டாலின், நான் திட்டங்களுக்கு வெறும் அறிவிப்பை மட்டும் செய்வதாக கூறிவந்தார். ஆனால், தலைவாசல் கால் நடை பூங்கா தொடங்கப்படும் என ஒரு ஆண்டுக்கு முன்பு அறிவித்து தேவையான நிதி ஆதாரத்தையும் ஒதுக்கீடு செய்தேன்.
 
இப்போது இந்த கால்நடை மருத்துவக் கல்லூரியை நானே திறந்து வைத்து உள்ளேன். நான் சொல்வதைத்தான் செய்து உள்ளேன் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்