அதிமுக இரண்டாகப் பிளவுபட்டு எடப்பாடிப் பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தலைமையிலான மற்றொரு அணியாகவும் பிளவுபட்டது. இதற்கிடையே நடந்த கூத்துகளால் மக்களுக்கு அதிமுக வின் மீது நம்பிக்கை சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. இதற்கிடையே அமமுக வில் முக்கியப் பொறுப்பில் இருந்தவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி திமுக வில் இணைந்து அதிமுக வுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தார்.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுக வில் இணையும் மாநாடு நேற்று கரூரில் நடந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே சமயத்தில் மாற்றுக் கட்சியினரை அதிமுக வில் இணைக்கும் நிகழ்ச்சி ஒன்றும் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் விஜயபாஸ்கர் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் எனக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒருங்கிணைத்தார்.
விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ’மாற்றுக்கட்சியிலிருந்து 3000க்கும் மேற்பட்டோர் இன்று நம் கட்சியில் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜி பச்சோந்தி போல கட்சி மாறிக் கொண்டிருக்கிறார். அவர் இதுவரை 5 கட்சிகளில் இருந்துவிட்டு மறுபடியும் திமுக வுக்கே சென்றுள்ளார். செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி. முதலில் அமமுக வில் சென்று வியாபாரத்தை நடத்த நினைத்தார். ஆனால் அங்கு வியாபாரம் ஆகாத்தால் திமுக வுக்கு சென்றுள்ளார்.’ எனப் பேசினார்.