பெண்களின் திருமண வயது 21 குறித்து டாக்டர் ராமதாஸ் கருத்து!

வியாழன், 16 டிசம்பர் 2021 (16:15 IST)
பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் இது குறித்த சட்டத்திருத்தம் விரைவில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்தப் புரட்சிகர முடிவு பெரிதும் உதவும்!
 
உலக அளவில் இந்தியப் பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும்தான் காரணம் ஆகும். பெண்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும் பக்குவத்தை அடைய 21 வயது நிறைவடைய வேண்டியது அவசியமாகும்!
 
இவற்றைக் கருத்தில் கொண்டுதான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாமக வலியுறுத்தி வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றமும் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தப் பரிந்துரை அளித்திருந்தது.
 
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பதை பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும்!" இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்