தமிழ்நாட்டில் மிகவும் பரிதாப நிலையில் உள்ளவர்கள் ஆசிரியர்கள் தான்.. பாமக ராமதாஸ்..!

Mahendran

வியாழன், 5 செப்டம்பர் 2024 (11:49 IST)
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட, பரிதாப நிலையில் உள்ள சமூகம் என்றால் அது ஆசிரியர்கள் தான் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அழியாச் செல்வமான கல்வி வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் நாளை கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.  ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும்  உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஓர் அறையில் விலைமதிப்பு மிக்க எந்தப் பொருளும் இல்லாவிட்டாலும் கூட, சிறிய விளக்கு ஒளி மட்டும் இருந்து விட்டால், அது அந்த அறையையே நிறைத்து விடும். அதேபோல், ஒரு நாட்டில் எந்த வளமும் இல்லாவிட்டாலும் கூட கல்வியும், மனிதவளமும் மட்டும் நிறைந்திருந்தால், அந்த நாட்டிற்கு மீதமுள்ள அனைத்து வளங்களும் கிடைத்து விடும். கல்வியின் சிறப்பு அந்த அளவுக்கு மகிமையானது. கல்விக்கு அம்மகிமையை வழங்குபவர்கள் கல்வி தரும் வள்ளல்களான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தான்.
 
அழியாச் செல்வமான கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால், ஆசிரியர்களின் நிலை இன்று அந்த அளவுக்கு இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை; 15 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம ஊதியம் இல்லை; கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு ஆசிரியர்  பணி வழங்கப்படவில்லை; அவர்கள் மீது போட்டித்தேர்வு திணிக்கப்படுகிறது; பெரும்பாலான  ஆசிரியர்கள் தற்காலிகமாகவும், கவுரவ விரிவுரையாளர்களாகவும் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்; இவ்வளவு அநீதிகளையும் தாங்கிக் கொண்டு பணி செய்யும் ஆசிரியர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கு மாறாக, அவர்களின் பதவி உயர்வை பறிக்க அரசாணை 243 சுமத்தப்படுகிறது. இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட, பரிதாப நிலையில் உள்ள சமூகம் என்றால் அது ஆசிரியர்கள் தான்.
 
ஆசிரியர்களுக்கு உரிமைகள் தான் வழங்கப்படவில்லை என்றால், அவ்வாறு வழங்கப்படாததைக் கண்டித்து போராடக்கூட அவர்களால் முடியவில்லை. கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் அரசு, அதற்காக குரல் கொடுக்கும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைப்படுத்துகிறது. ஆண்டுதோறும் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதும், கட்டாயப்படுத்தி பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதும், உண்ணாவிரதம் இருந்து மயங்கி விழுந்தாலும் மனிதநேயமின்றி வேடிக்கைப் பார்க்கும் அவலமும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
 
ஆசிரியர்கள் போராடும் நிலை நிலவுவதே அரசுக்கு அவலம் தான். அவ்வாறு போராடியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு மறுப்பது பேரவலத்தின் சான்று ஆகும். தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைவதற்கு ஆசிரியர்கள் போற்றப்படாமல் அவமதிக்கப்படுவதும் காரணம் என்பதை அரசு உணர வேண்டும்.
 
அனைவரின் உயர்வுக்கும் காரணமான ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் அவர்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும். வேண்டும்.  இதை உணர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டு, அதன் மூலம் அவர்களின் குறைகளும், கவலைகளும் களையப்பட வேண்டும் என்று கூறி, இந்த நாளில் ஆசிரியர் பெருமக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்