திமுக விஜயகாந்தின் பதிலுக்காக காத்திருக்கிறது - டி.கே.எஸ்.இளங்கோவன்

சனி, 26 டிசம்பர் 2015 (19:30 IST)
திமுக விஜயகாந்தின் பதிலுக்காக காத்திருக்கிறது என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேரங்கள் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் இன்னும் பாஜக கூட்டணியில்தான் பாமகவும், தேமுதிகவும் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தராஜன் கூறி வருகிறார்.
 
மறுபுறம், மக்கள் நலக் கூட்டியக்கத்தினர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தங்களது கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியும் விஜயகாந்தின் பதிலுக்கு காத்திருக்கிறார்.
 
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், ‘’கூட்டணி குறித்து இப்போதைக்கு பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. விஜயகாந்திடம் இருந்து வரும் பதிலை பொறுத்துதான் பேச்சுவார்த்தை முடிவாகும். அவரது பதிலுக்காக காத்திருக்கிறோம்’’ என்று பதிலளித்துள்ளார்.
 
திமுக குழப்பத்தில் உள்ளதாக பாஜல தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறியது குறித்த கேள்விக்கு, ‘’நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம். கூட்டணி அமைப்பதில் திமுகவில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். எங்கள் திட்டம் தெளிவாக  உள்ளது.
 
தமிழகம் முழுவதும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக அமர்ந்து மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார்.  ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் 3 பேர் தங்களை முதலமைச்சராக நினைத்து கொண்டு குழப்பத்தில் உள்ளனர். இந்த 3 பேர் எப்படி வந்தார்கள் என்று முரளிதர ராவ் சொன்னால் தெளிவாக  இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்