குடி போதையில் ஜெயலலிதாவின் உடல் நிலையை விமர்சித்த திமுக தொண்டருக்கு அடி உதை!
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (09:11 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. இதனையடுத்து காவல்துறை வதந்தி பரப்புவோரை கடுமையாக எச்சரித்தது.
அப்பல்லோ மருத்துவமனையும், முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டது. ஆனாலும் வதந்திகள் தினமும் பரவி வந்தது. இதனையடுத்து வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர் காவல்துறையினர்.
அதன் பின்னர் தான் தற்போது வதந்திகள் குறைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்தன. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இதனை கடுமையாக எச்சரித்தார். வேண்டுமென்றே திமுகவினரை கைது செய்வதாக குற்றச்சாட்டு வைத்தார்.
இந்நிலையில் கோவையை சேர்ந்த லிங்கதுரை என்ற திமுக தொண்டர் ஒருவர் குடித்து விட்டு வந்து குடிபோதையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜ் கோபத்தில் லிங்கதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் கடைசியில் அடிதடியில் முடிந்துள்ளது. இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மீது ஒருவர் தாக்கியதாக புகார்களை வைக்கின்றனர்.