மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் அது குறித்த பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இது குறித்து கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஆவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதிலளித்துள்ளார்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூபாய் ஆயிரத்து 264 கோடி ஒதுக்கி அதில் ரூபாய் 12 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதம் ஏன் என்ற திமுக எம்பி டி ஆர் பாலு அவர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இவ்வாறு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து நிதி வராவிட்டால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்படுமா? மதுரை என்ன ஜப்பானிலா இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ ஆட்சிக்கு வராது என்பதால் பாஜக தமிழகத்துக்கு ஏன் செலவு செய்யவேண்டும் என நினைக்கிறதா? பாஜக கொண்டுவந்ததே இந்த ஒரு திட்டம்தான், அதையும் 7 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு பம்மாத்து பண்ணுகிறது.எனக் கூறியுள்ளார்.