சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி, உறுப்பினர்களின் வார்டுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை என்றும், பாரபட்சமாக செயல்படுகிறார் என்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், தங்கள் வார்டுகளுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த சில தி.மு.க. கவுன்சிலர்களும் உமா மகேஸ்வரிக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இந்த சூழ்நிலையில், நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி 24 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், இன்று நகர்மன்ற கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில், 28 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் மட்டுமே உமா மகேஸ்வரிக்கு ஆதரவாக வாக்களித்தார். எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால், உமா மகேஸ்வரி தனது நகர்மன்ற தலைவர் பதவியை இழந்தார். தற்போது துணைத் தலைவராக உள்ள கண்ணன் இடைக்கால நகர்மன்ற தலைவராகப் பொறுப்பு வகிப்பார் என்று கூறப்படுகிறது.