கருணாநிதி உடல்நிலை குறித்த செய்தி: கோவை திமுக தொண்டர் மாரடைப்பால் மரணம்

திங்கள், 30 ஜூலை 2018 (09:07 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நேற்றி இரவு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனால் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காவேரி மருத்துவமனை முன் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு என்ற செய்தியை தொலைக்காட்சி செய்தியில் கேட்ட கோவையை சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியை சேர்ந்த ரா.அம்சகுமார் என்ற 62 வயது திமுக தொண்டர் தொலைக்காட்சியில் கருணாநிதியின் உடல் நலிவுற்ற செய்தியை கேட்டதும் மனம் வருத்தத்தில் இருந்ததாகவும் அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உடனடியாக அவர் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் அந்த பகுதி மக்களும், திமுக தொண்டர்களும் பெரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.  
 
மாரடைப்பால் மரணம் அடைந்த அம்சகுமார் என்னும் தொண்டர் குள்ளக்காபாளையம் 4-வது வார்டு அவைத்தலைவராக இருந்து வந்தவர். திமுக அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். திமுக பொதுக்கூட்டம், நிகழ்ச்சி என எந்த விழாவாக இருந்தாலும் முதல் ஆளாக அதில் கலந்து கொள்பவர் என அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்