தினகரன், திருமாவளவன் திடீர் சந்திப்பு: கூட்டணிக்கு அச்சாரமா?

செவ்வாய், 27 நவம்பர் 2018 (09:10 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற போது தினகரனும் திருமாவளவனும் சந்தித்துக் கொண்டனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். மீளா துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராம மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கவும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நேற்று புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கு மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் அவர்களுக்கு ஆறுதல்களையும் கூறினார்.
அப்போது அங்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் மக்களை சந்திக்க வந்திருந்தார். அங்கு தினகரன் வந்திருப்பதை அறிந்த திருமாவளவன், தினகரனை நேரில் சந்தித்தார். அங்கே இருக்கும் மக்களின் மனநிலையையும், சேதாரங்களைப்பற்றியும் சிறிது நேரம் ஆலோசித்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
 
சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுகவுடன் இப்போதைக்கு தேர்தல் கூட்டணியில் இல்லை என்று கூறினார். இதனால் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் திமுக மீது அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இவர்களின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்