திருட போன இடத்தில் செம்ம தூக்கம்! – தானாக சிக்கிய டெலிவரி பாய்!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:13 IST)
சென்னையில் வீடு ஒன்றில் திருட சென்ற உணவு டெலிவரி பாய் அதே வீட்டில் படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்தழகன் என்ற இளைஞர். பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதிக்கு அடிக்கடி டெலிவரிக்கு சென்ற முத்தழகன் அங்கு ஆள்நடமாட்டம் இன்றி தனியாக இருந்த பிரபாகரன் என்பவரின் வீட்டை நோட்டம் இட்டுள்ளார்.

அந்த வீட்டில் திருட திட்டமிட்ட அவர் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து மொட்டை மாடியை அடைந்துள்ளார். அங்கிருந்து கீழே செல்ல உள்ள கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் அதை திறக்க கடினமாக இருந்ததாலும், முத்தழகன் மது அருந்தியதால் போதை தலைக்கேறியதாலும் கதவை திறந்த பிறகு கொள்ளையடிக்கலாம் என அசந்து தூங்கியுள்ளார். விடிந்த பிறகும் மொட்டை மாடி கதவு திறக்கப்படாத நிலையில் மாட்டிக்கொள்வோமே என அஞ்சி வெயிலில் உணவின்றி மொட்டை மாடியிலேயே இருந்துள்ளார்.

மாலை நேரத்தில் பைப் ஒன்றை சரிசெய்வதற்காக ப்ளம்பரை அழைத்து கொண்டு மொட்டைமாடிக்கு வந்த பிரபாகரன் அங்கு முத்தழகன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கிருந்து தப்பிக்க முயன்ற முத்தழகனை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். திருட சென்ற இடத்தில் படுத்து தூங்கி அங்கேயே சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்