முதல்வருக்கு தீபக் கடிதம்: போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (10:34 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவிடமாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


 
 
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது முதல் தீபா, தீபக் விவகாரம் எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபாவும் தீபக்கும் இருக்கும் போது அவர்களது ஒப்புதல் இல்லாமல் அதனை எப்படி அரசு கைப்பற்ற முடியும் என கேள்வி எழுகிறது.
 
இதனையடுத்து தீபா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். வேதா நிலையம் எங்கள் பாட்டி சந்தியா கட்டியது. அதன் வாரிசுகள் நானும் எனது சகோதரனும். நாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம், எக்காரணம் கொண்டும் அதனை விட்டுத்தர மாட்டோம். ஆட்சியை காப்பாற்ற தான் எடப்பாடி இதனை செய்கிறார் என தீபா குற்றம் சாட்டினார்.
 
இதனையடுத்து தீபக் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீடு எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது.
 
எங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம். அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதே நேரத்தில் நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதனையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை உரிமை கொண்டாடி தீபா, தீபக் உள்ளிட்டோர் வரலாம் என்பதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். சீருடை அணிந்த போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்