நான் உங்கள் வீட்டு பிள்ளை: தொண்டர்கள் மத்தியில் தீபா பேச்சு

செவ்வாய், 10 ஜனவரி 2017 (13:36 IST)
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.   

 

 

சசிகலாவின் தலைமையை பிடிக்காத அதிமுக தொண்டர்கள், அந்த கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அதில் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கும் செல்லும் அவர்கள் அவரை நேரில் பார்த்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுக்க பல இடங்களில் அவரின் பெயரில் பேரவை துவங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்கள் அவருடைய இல்லத்திற்கு சென்று அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். அப்போது அவர் பேசியபோது,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் நமது பணிகளை விரைவில் தொடங்குவோம். அன்னை காப்பதுபோல நம்மை எல்லாம் ஜெயலலிதா காத்துவந்தார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் போது  நமக்கான பாதையை அமைத்துகொள்வோம். நான் உங்கள் வீட்டு பிள்ளை. உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப பணியாற்றுவேன் என்று பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்