முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது அண்ணன் மகள் தீபா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜெயலலிதா இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே மரணம் அடைந்து விட்டதால் அவரது பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.
இருப்பினும், அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க வைர நகைகள், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் ஆகியவை பெங்களூரில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த பொருட்களை ஏலம் விட திட்டமிட்டபோது, ஜெயலலிதாவின் வாரிசு தான் என்றும், தன்னிடம் தான் அந்த பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் தீபா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவுடன் ஒப்படைக்க முடியாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இருப்பினும், மேல்முறையீடு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.