துவங்கும் விமான சேவை: கொரோனா கெடுபிடிகள் என்னென்ன??
வியாழன், 21 மே 2020 (14:40 IST)
விமான சேவை துவங்க உள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான புதிய நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கின்போது பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது என்பது தெரிந்ததே.
இந்நிலையில் மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது முதல் கட்டமாக உள்நாட்டு விமான சேவையை தொடங்க இருப்பதாகவும் அதன் பின்னர் படிப்படியாக வெளிநாட்டு விமான சேவையை விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது உள்நாட்டு விமான சேவைக்கான புதிய நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
விமான சேவை பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொது போக்குவரத்து மற்றும் தனியார் டாக்ஸிகள் கிடைப்பதை மாநில அரசுங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நெரிசலைத் தடுக்கவும், சமூக விலகலை பராமரிக்கவும் போக்குவரத்து காவல்துறையினர் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட வாகனங்களையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டாக்ஸி சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் மற்றும் அதிகபட்சம் நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே வர வேண்டும்.
அனைத்து பயணிகளும் முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை அணிந்திருப்பது அவசியம்.
அனைத்து பயணிகளும் தங்களது திறன்பேசிகளில் 'ஆரோக்கிய சேது' செயலிகளை பதிந்திருப்பது கட்டாயம்.
14 வயதிற்குட்பட்டவர்கள் இந்த செயலியை பதிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே பயணிகள் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய சேது செயலியில் பச்சை நிறம் காணப்படாதவர்களுக்கு விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது
சமூக விலகலை உறுதிசெய்யும் வகையில் பயணிகளுக்கு விமானத்தில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.
விமான நிலையத்தில் பயணிகள் தங்களது பொருட்களை ஒப்படைக்கும் இடத்தில் போதுமான அளவு பணியாளர்கள் இருப்பதை விமான சேவை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து விமான பணியாளர்களுக்கும் கிருமி நாசினிகள் உள்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
விமான நிலைய கட்டடத்தின் அனைத்து இடங்களும் அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படும்.
விமான நிலையத்தின் முனையத்தில் செய்தித்தாள்கள், இதழ்கள் வழங்கப்படமாட்டாது.