ஜெ. மரணம் குறித்த நீதிபதி சந்தேகம் - வாய் விட்டு மாட்டிக்கொண்ட வைகோ

வியாழன், 5 ஜனவரி 2017 (11:58 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி சந்தேகம் எழுப்பியதற்கு, வைகோ கண்டனம் தெரிவித்ததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது.


 

அதிமுகவின் உறுப்பினரான பி.ஏ. ஜோசப் ஸ்டாலின் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான எல்லா ஆவணங்களையும் அளிக்க மாநில அரசுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் இடைக்கால உத்தரவிட வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி.பார்த்திபன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது குறிப்பிட்ட நீதிபதி வைத்தியநாதன், "ஜெயலலிதா குணமடைந்து வருவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆவணங்களில் கையெழுத்திட்டார், கூட்டங்களை நடத்தினார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பத்திரிகையாளர்களிடம் நீதிபதிகளின் கருத்துக்கு பதிலளித்தபோது, ”உடலைத் தோண்டியெடுத்து பரிசோதிக்க உத்தரவிடுவேன் என நீதிபதி கூறியிருப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீதிபதி கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அவர் தனது எல்லையைத் தாண்டி பேசியிருக்கிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

வைகோ தெரிவித்துள்ள இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று கூறி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்