திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு.? அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் கடிதம்.!!

Senthil Velan

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (12:34 IST)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் நடத்த அனுமதி கோரி ரயில்வே கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது போன்ற பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். 
 
மேலும், கட்சியில் யாருக்கெல்லாம், எந்தெந்த பதவிகளை வழங்குவது என்பது குறித்தும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தில் எப்படியாவது பதவிகளை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு, தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று மக்கள் பணிகள், நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர்.

முதலில் மாநில மாநாட்டை நடத்தி முடித்த பிறகு, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபயணங்களை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருக்கிறார். மாநாட்டை பொறுத்தவரை மதுரையில் நடத்த இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில்  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 25ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

ALSO READ: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.! கந்து வட்டி கடன் செயலிகள் கண்காணிப்பு.! சக்திகாந்த தாஸ்...
மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஆர்டரும் இப்போதே கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்