நிலவேம்பு கசாய விவகாரம் ; கமல்ஹாசனை கைது செய்ய புகார்

வியாழன், 19 அக்டோபர் 2017 (15:06 IST)
நடிகர் கமல்ஹாசன் நிலவேம்பு கசாயம் பற்றி தவறான கருத்துகளை கூறிவருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்து விட்டனர். இதற்கு முன் பலர் உயிரிழந்துள்ளனர். அந்நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த அனைவரும் நிலவேம்பு கசாயம் அருந்த வேண்டும் என அரசு வலியுறுத்தியது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயத்தை அளித்து வருகின்றனர். இதில், நடிகர் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தாரும் அடக்கம்.
 
இந்நிலையில், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது எனவும், முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மை தன்மை பாதிக்கப்படுவதாகவும்  செய்திகள் பரவின. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 
 
அந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும். 
 
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை! பாரம்பரிய காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என பதிவு செய்திருந்தார்.
 
இந்நிலையில், கமல்ஹாசனின் கருத்து தவறானது சில சித்தமருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தேவராஜன் என்ற சமூக சேவகர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், அரசு மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக கமல்ஹாசன் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கு வகையில் பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதாகவும் எனவும், அவரின் டிவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களிடையே வன்முறையை தூண்டும் வண்ணம் பேசி வரும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்