10 மாவட்டங்களில் குளிர்சாதன சேமிப்பு கட்டமைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

புதன், 25 மார்ச் 2015 (13:59 IST)
ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் குளிர்சாதன கட்டமைப்புகளை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
இது துறித்து தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:–
 
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் 2,000 மெட்ரிக் டன்னிலிருந்து 10,000 மெட்ரிக் டன் வரையிலான கொள்ளளவு கொண்ட 88 நவீன சேமிப்பு கிடங்குகளும், தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 70 குளிர் சாதன சேமிப்பு கிடங்குகளும் 149.86 கோடி ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளியில் வாழைக்கும், கிருஷ்ணகிரி மற்றும் தேனியில் மாம்பழத்திற்கும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் தக்காளிக்கும், திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளியில் வெங்காயத்திற்கும், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் மிளகாய்க்கும் ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் குளிர்சாதன சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய இந்த அரசு முனைந்துள்ளது. நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கூடுதலாக, அதாவது சாதாரணரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 50 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 70 ரூபாயும், மாநில அரசின் ஊக்கத்தொகையாக வழங்கி, சாதாரணரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,410 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,470 ரூபாயும் இறுதி விலையாக இந்த அரசு அளித்து வருகிறது.
 
வேளாண் உற்பத்தியை உயர்த்துவதற்குத் தரமுள்ள விதைகள், உரங்கள் போன்ற வேளாண் இடுபொருட்கள் சரியான நேரத்தில், நியாயமான விலையில் கிடைப்பது இன்றியமையாததாகும்.
 
விவசாயிகளுக்குத் தரமான விதைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, தொடக்க நிதியுதவியாக 25 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை என்ற புதிய அமைப்பை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்