காரமடை பெண் பேராசிரியர் கொலை குற்றவாளி கைது: திடுக்கிடும் தகவல்கள்

ஞாயிறு, 25 ஜனவரி 2015 (16:58 IST)
கோவை மாவட்டம் காரமடையில் உதவி பெண் பேராசிரியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கொலையாளி கைதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான இளைஞர் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கொலை, பாலியல் பலாத்காரம், திருட்டு உள்ளிட்ட குற்றங்களைச் செய்தவர் என்பதும் வயாகரா மாத்திரை பயன்படுத்துபவன் என்பதும் தெரியவந்துள்ளது.
 
இந்த கைது சம்பவம், திருட்டு முயற்சி நடந்த வீட்டில் கிடைத்த துண்டுச்சீட்டு மூலம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கோவை, காரமடை, ஆசிரியர் காலனியைச் சேர்ந்த தர்மராஜின் மூத்த மகள் ரம்யா. தனியார் பொறியியல் கல்லூரியில், உதவி பேராசிரியராகப்  பணியாற்றினார். கடந்த ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதி இரவு வீட்டில், மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 
அப்போது இவரது தாய் மாலதிக்கும் தலையில் வெட்டு விழுந்திருந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காரமடை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொலை குற்றவாளியை 80 நாட்களுக்குப்பின் கைது செய்துள்ளனர்.
 
இது தொடர்பாக கோவை எஸ்.பி. சுதாகர் கூறுகையில்,

கடந்த 11ஆம் தேதி, கோவில்பாளையம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் திருட முயற்சி நடந்தது. வீட்டில் வசிப்பவர்கள் கூச்சலிட்டதால், திருட வந்த நபர் தப்பி ஓடினான். அப்போது, அவனது பாக்கெட்டிலிருந்து சில துண்டு சீட்டுகளும், மாத்திரைகளும் விழுந்தன. சம்பவத்துக்குப்பின், இத்தடயங்களை, தனிப்படையினர் சேகரித்தனர். விசாரணையில், துண்டுச் சீட்டுகளில் நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்பட சில தகவல்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன.
 
கிடைத்த தகவல்கள் மூலம் விசாரித்தபோது, குறிப்பிட்ட நபர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மகேஷ் (எ) டேனியல் 28 வயது இளைஞர்  என்பது தெரிந்தது. இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன், சிறுமுகை ரோட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் சிக்கினான். அப்போது அவனிடம் மேற்கொண்ட தீவிர  விசாரணையில் காரமடை பெண் உதவி பேராசிரியரை கொலை செய்து நகை பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
கொலை நடந்த அன்று, உதவி பேராசிரியரைப் பின்தொடர்ந்து சென்று, வீட்டினுள் நுழைந்து, பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்ததுடன், கொலையும் செய்துள்ளான். அவன் மீது திருநெல்வேலியில் கொலை, வழிப்பறி உள்பட பல வழக்குகள் உள்ளன. அவன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
காரமடை உதவி பேராசிரியர் கொலை வழக்கில், மூன்று மாதங்களாக குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கோவில்பாளையத்தில் திருட்டு முயற்சியில் கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டுகள் மற்றும் 'வயகரா' மாத்திரைகள் விசாரணைக்கு கைகொடுத்துள்ளன. துண்டுச்சீட்டுகளில், நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு ஆஜராக வேண்டிய நாட்களை கொலையாளி எழுதி வைத்துள்ளான்.
 
இதன் மூலம் அவனைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. பிடித்து விசாரித்தபோது, உதவி பேராசிரியர் கொலை வழக்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்