சீரியஸாக போராடும் மாணவர்கள்.. சிரித்த படி ஓ.பி.எஸ்
வியாழன், 19 ஜனவரி 2017 (13:17 IST)
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள் தீவிரமாக போராடி வரும் வேளையில், அதனை உணராமல் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிரித்த படி பேட்டி கொடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஐ.டி. ஊழியர்கள் என பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த 15ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தை துவங்கிய போது, முதல்வர் பன்னீர் செல்வம் தங்களிடம் வந்து பேச வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் முதல்வர் அங்கு சென்று அவர்களை சந்திக்கவில்லை. மேலும், போராட்டம் தீவிரமடைந்த போதும், ஓ.பி.எஸ், அதுபற்றி எந்த கருத்தும் கூறாமல் மௌனம் காத்தார். இதனால், தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா எனவும், முதல்வர் எங்கே? எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளேன். எனவே மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என நேற்று ஓ.பி.எஸ் ஒரு அறிக்கை விடுத்தார். ஆனால், அறிக்கை போதாது.. ஜல்லிக்கட்டிற்கான அனுமதியே எங்களுக்கு வேண்டும் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அந்நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ், தமிழகத்தில் தீவிரமான போராட்டம் என்ற ஒன்று நடப்பதையே உணராதவர் போல் மிக சாதரணமகவும், இயல்பாகவும், சிரித்தபடியே பேட்டியளித்தார். மேலும், இன்று காலை டெல்லிக்கு சென்று மோடி சந்தித்து அவர் பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என மோடி கைவிரித்து விட்ட பின், ஓ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போதும் சிரித்த படியே, மிகவும் இயல்பாகவே பேசினார். மேலும், ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டம் பற்றி வலியுறுத்தியுள்ளேன் என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டிற்கான மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருவது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல், வர்தா புயல் மற்றும் விவசாயிகளுக்கான நிவாரணம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
மோடி கை விரித்து விட்ட நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஓ.பி.எஸ் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காதது, ஜல்லிக்கட்டிற்காக போராடும் மாணவர்களின் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.