மாணவர்கள் போராட்டத்தால் மிரண்டது அரசு: முதலமைச்சர் அவசர ஆலோசனை!

புதன், 18 ஜனவரி 2017 (11:17 IST)
மாணவர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் தமிழகம் உணர்ச்சிப்பெருக்கால் போராட்டக்களமாக மாறியுள்ளது. மாணவர்கள் படையின் முன் அரசின் அதிகாரம் அடக்குமுறை அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது. இதனால் தமிழக அரசு மிரண்டு போயுள்ளது.


 
 
மாணவர்களின் தொடர் போராட்டம் அரசை ஆள்பவர்களை கலங்க வைத்துள்ளது. நாட்கள் ஆக ஆக போராட்டம் தீவிரமடைந்து வருவதால் நிலமை மோசமாகி வருகிறது என்பதை அரசு உணர தொடங்கியுள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 
மாணவர்களின் போராட்டம் குறித்து DGP ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையருடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டம் எந்த விதமான சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிட கூடாது என ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
மேலும் தமிழக அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இது குறித்து அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்