ஸ்டாலின், கருணாநிதி மோதல்: கசியும் ரகசிய தகவல்

திங்கள், 13 ஜூன் 2016 (17:38 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.


 
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் தலைவர் கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்றாலும், ஸ்டாலின் தரப்பினர் அவரை தான் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களையும், சமூக வலைதள பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். இதனால் கட்சி தோல்வியடைந்ததும் கருணாநிதி ஸ்டாலின் தரப்பு மீது கோபமாக இருந்துள்ளார்.
 
தேர்தல் முடிந்த பின்னரும் ஸ்டாலின் தரப்பினர் சமூக வலைதளங்களில் ஸ்டாலினை முன்னிறுத்தியே பதிவிட்டு வந்துள்ளனர். இதனால் கருணாநிதி மீண்டும் கட்சியை தன்னுடைய முழுக்கட்டுபாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் தான் 93 வயதிலும் நான் சட்டசபைக்கு வருவேன் என சொல்லி சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளார் கருணாநிதி எனவும் தகவல் வருகிறது.
 
ஸ்டாலின், கருணாநிதி மோதல் அத்தோடு நில்லாமல் கருணாநிதியை அவுரங்கசீப்புடன் ஒப்பிட்டு பேஸ்புக்கில் ஸ்டாலின் தரப்பு ஒரு பதிவிட்டுள்ளது. அதாவது 92 வயதிலும் அவுரங்கசீப் அதிகாரத்தை கையில் வைத்ததால் தான் அவருக்கு பின்னர் முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது என மறைமுகமாக கருணாநிதியை தாக்குவது போல் இருந்தது அந்த பதிவு.
 
இதனால் கோபமடைந்த கருணாநிதி தரப்பு அவரது ஆதரவாளரை கொண்டு பதில் கருத்து பதிவிடப்பட்டது, அதில் அவுரங்கசீப் ஒன்றும் தன் மகனுக்கு துணை ராஜா பதவி தரவில்லை என்று நினைக்கிறேன். தளபதி ஒன்றும் அவுரங்கசீப் வீட்டு பிள்ளைகளைப் போல, ராஜா வீட்டு கன்றுக்குட்டி அல்ல என கூறப்பட்டிருந்தது.
 
இப்படி திமுகவின் இரு பெரும் தலைகளுக்கு இடையே மோதல் உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்