ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் இறையன்புவை பாராட்டி முதல்வர் கடிதம்

வெள்ளி, 30 ஜூன் 2023 (20:02 IST)
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகக் முக.ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழககத்  தலைமைச் செயலாளராக  இறையன்பு நியமிக்கப்பட்டார்.

இவர் இன்று ஓய்வு பெற்றார்.  இதையடுத்து அவருக்கு தலைமைச் செயலாக அதிகாரிகள் பிரியாவிடை அளித்தனர். புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர், முக. ஸ்டாலின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  அன்பும் பண்பும் நிறைந்த சகோதரர் திரு. வெ.இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி ஓய்வு பெற்றுச் செல்லும் இன்றைய தினம் என்பது தங்களது நிர்வாகப் பணிகளுக்கான ஓய்வே தவிர, சமூக, இலக்கியப் பணிகளுக்கான ஓய்வல்ல என்பதைத் தாங்களும் அறிவீர்கள். அந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் தங்களது சமூக இலக்கிய - ஆய்வுப் பணிகளைத் தொய்வின்றித் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மிக நெருக்கடியான கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் கழக ஆட்சி அமைந்தபோது, நிர்வாகத் துறையில் தலைமைப் பொறுப்பான தலைமைச் செயலாளர் பொறுப்பைத் தாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டு வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டீர்கள். கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசின் அனைத்து முன்னெடுப்புகளையும் முடுக்கிவிட்டு, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு தங்களது சிந்தனை, செயல் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினீர்கள். குறிப்பாக, சென்னை வெள்ள நிவாரணப் பணிகளின்போதும், உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் வண்ணம் நடத்தி முடித்திடவும் தங்களின் பங்களிப்பு மகத்தானது. மேலும், விடுமுறை தினங்களிலும் தாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அலுவலர்களை வழிநடத்திய விதம் போற்றுதற்குரியது.

இன்றைக்கு இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தங்களது வழிகாட்டுதல்களும், நிர்வாகத் திறமையும், துறை ஒருங்கிணைப்பும் மிகமிக முக்கியமான அடித்தளமாக அமைந்திருந்தது.

தங்களது இரண்டு ஆண்டுப் பணி என்பது, தமிழ்நாட்டுக்கு காலம் காலமாக நினைவுகூரக் கூடிய பணியாக அமைந்திருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசும், குறிப்பாக தனிப்பட்ட முறையில் நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் எதிர்கால இளைய தலைமுறை அலுவலர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்துள்ளீர்கள். பல்துறை ஆற்றல் கொண்ட தாங்கள், தொடர்ந்து இந்த மாநிலத்துக்கும் மனித குல மேம்பாட்டுக்கும் அருந்தொண்டாற்றி வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புமிகு நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்