முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்..! கள்ளச்சாரய விவகாரத்தில் இபிஎஸ் வலியுறுத்தல்..!!

Senthil Velan

வியாழன், 20 ஜூன் 2024 (12:59 IST)
கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபர்களை அதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் கொடி கட்டி பறக்கிறது என்றும் கருணாபுரத்தில் முக்கிய அலுவலகங்கள் இருந்தும் 38 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். காவல் நிலையம்  பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால், அரசின் நிர்வாக திறமையை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
 
இதற்கு பின்னாள் பெரிய கும்பல் உள்ளதாக தெரிவித்த எடப்பாடி  ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இதில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார். கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்தார். 
 
கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் விற்பனை தடையின்றி நடப்பதாக கள்ளக்குறிச்சி எஸ்பி.யிடம் அதிமுக எம்எல்ஏ., போனிலும் நேரிலும் புகார் தெரிவித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
 
தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது என்றும்  நாமக்கல்லில் குடோனில் வைத்து திமுக பிரமுகர் கள்ளச்சாராயம் விற்கிறார் என்றும் புகார் அளித்ததும், அவரை கைது செய்யாமல், அங்கு வேலை செய்த வட மாநிலத்தவரை கைது செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ALSO READ: கள்ளக்குறிச்சி விவகாரம்..! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!!
 
கள்ளச்சாராய மரணத்திற்கு காரணம் முதல்வரின் நிர்வாக திறமையின்மை என்று அவர் விமர்சித்தார்.  மரணத்திற்கு காரணமான நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்