தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன.. ஈபிஎஸ் கேள்விக்கு முதல்வர் பதில்..!

Mahendran

வியாழன், 20 மார்ச் 2025 (11:44 IST)
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாகவும், கொலைகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
இதை மறுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில், “தமிழகத்தில் நேற்று 4 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். ஆனால், கோவை சம்பவம் விசாரணையில் தற்கொலை என தெரிய வந்துள்ளது. மதுரை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு கொலை நடந்துள்ளது. ஈரோடு சம்பவத்தில், ஒரு சரித்திர குற்றவாளி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது” என்று கூறினார்.
 
அதன் பிறகு, அவர் மேலும் தெரிவித்ததாவது: “எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனம் செய்துள்ளார். ஆனால், தமிழக காவல்துறை முழுமையாக சுதந்திரமாக செயல்பட்டு, எந்தக் கட்சியினராயினும் குற்றம் செய்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்விதத் தயக்கமுமின்றி குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்கள், கூலிப்படைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மேலும் தேவையான சந்தர்ப்பங்களில் குண்டர் சட்டமும் பயன்படுத்தப்படுகிறது.
 
 கடந்த 12 ஆண்டுகளில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2012ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 1,943 கொலைகளும், 2013ஆம் ஆண்டில் 1,927 கொலைகளும் நடந்துள்ளன. ஆனால், 2024ஆம் ஆண்டில் 1,540 கொலைகளே பதிவாகியுள்ளன. இதுவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை உறுதியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது” என்றார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்