நாங்க ரொம்ப ஸ்ரிக்ட்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரூல்ஸ் போடும் சென்னை காவல்!!
புதன், 28 டிசம்பர் 2016 (17:20 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல், கிளப், உணவு மற்றும் கேளிக்கை விடுதி ஆகியவற்றுக்கு இதுவரை இல்லாத கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை காவல்துறை.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆண்டு தோறும் விபத்து மற்றும் விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகிறது. இதானால் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின் பேரில் கீழ்கண்ட வழி முறைகளை கடைபிடிக்குமாறு சென்னை பெருநகரக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
நட்சத்திர ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகள்:
# நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்தி கொள்வதுடன் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும்.
# வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
# அனுமதி வழங்கப்படாத இடங்களில் மது வகைகளை பரிமாறக் கூடாது. நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.
# கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் தன்மையை உறுதி செய்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
# நீச்சல் குளங்களை 31.12.2016 அன்று மாலை 6 மணிமுதல் 1.1.2017 அன்று காலை 6 மணிவரை மூடி வைத்திருக்க வேண்டும்.
# நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்களின் விபரங்களை ஓட்டல் நிர்வாகம் சரிபார்க்க வேண்டும்.
# குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு கூடுதலான விருந்தினர்களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கக்கூடாது.
# மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
# குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
# நிர்வாகத்தினர், கேளிக்கை நிகழ்ச்சிகளை மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்.
பொதுமக்கள்:
# குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
# இரு சக்கர வாகனங்களில், கார்களில் அதிவேகமாக செல்வதற்கும், இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
# கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது, கடல் நீர் அருகே செல்லக் கூடாது.
# இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்டால், வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
# பெண்களை கேலி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
# பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது. பிறர் மீது வர்ணப் பொடிகள் / வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
இந்த தகவல்கள் சென்னை பெருநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.