காரில் இருந்த காதலர்கள்; மிரட்டி பணம் கேட்ட காவலர்கள்! – தாம்பரத்தில் அதிர்ச்சி!

செவ்வாய், 14 மார்ச் 2023 (09:47 IST)
தாம்பரம் மணிமங்கலம் பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதலர்களிடம், போலீஸார் இருவர் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சமீபத்தில் பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வெளியில் சென்ற கிருஷ்ணன் ஆரம்பாக்கம் பகுதியில் காரில் அமர்ந்து அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்கள் யார் என விசாரித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மேல் நம்பிக்கை இல்லை என்றும், காவல் நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளனர். காவல் நிலையத்திற்கு சென்றால் திருமண சமயத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வரும் என அவர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் மிரட்டும் தொனியில் பேசிய போலீஸார் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்களை விட்டுவிட்டு விடுவதாக கூறியுள்ளனர்.

அவர்களிடம் கையில் பணம் இல்லை என்று சொன்னதால் Gpay மூலம் பணத்தை பெற்று கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற பின் அவர்கள் போலி காவலர்களாக இருக்கலாம் என கருதிய கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணனிடம் பணம் பறித்தது மணிமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்களான அமிர்தராஜ், மணிபாரதி என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்