சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கி பல ஆண்டுகள் ஆகும் நிலையில் ஆரம்பத்தில் பெருவாரியான மக்கள் டிக்கெட் விலை காரணமாக மெட்ரோவில் பயணிக்க தயக்கம் காட்டினர். பின்னர் மெட்ரோ நிர்வாகம் மாதாந்திர பாஸ்களுக்கு கட்டண சலுகை உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. தற்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு சில நிமிடங்களில் செல்ல மெட்ரோ சேவை பயனுள்ளதாக இருப்பதால் பலரும் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மெட்ரோவில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நிலையங்கள் வழியாக இரண்டு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோவில் 138 ரயில்களை ஓட்டுனர் இல்லாத தானியங்கி ரயில்களாக இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.