தமிழ்நாட்டில் மீண்டும் வறண்ட வானிலை.. வெப்பநிலை அதிகரிக்கும் என தகவல்!
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (15:12 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று முதல் மீண்டும் வறண்ட வானிலை ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் கோடை வெயில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆண்டு வெயில் எப்படி இருக்கும் என்று மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.