சென்னை வழக்கறிஞர்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை எதிரொலி!

வெள்ளி, 6 மார்ச் 2015 (18:13 IST)
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டமோ அல்லது மாட்டிறைச்சிக்கு தடையோ விதிக்கப்படவில்லை என்ற போதிலும், மகாராஷ்டிராவில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பசு மற்றும் மாடுகளைக் கொல்லவும், அவற்றின் இறைச்சிகளை விற்கவோ, கொண்டு செல்லவோ, வைத்திருக்கவோ கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
 
இந்நிலையில் மேற்கூறிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் இன்று கண்டன போராட்டம் நடத்தினார்கள். அப்போது சமைக்கப்பட்ட மாட்டிறைச்சிகளை சாப்பிட்டபடியே மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
 
முன்னதாக மகாராஷ்டிரா அரசின் மேற்கூறிய தடை உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் அதே போன்ற தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுத்திருந்தார்.
 
இதனை குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், தமிழகத்தில் அத்தகையதொரு தடை வந்துவிடக்கூடாது என்பதை தடுக்கும் நோக்கத்திலும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்