பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் அவசரம் ஏன்? நீதிமன்றத்தின் அதிரடி கேள்வியால் பரபரப்பு

திங்கள், 8 ஜூன் 2020 (12:36 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி நடத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் ஏராளமான பெற்றோர்களும் இந்த தேர்வை நடத்த வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். 
 
லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், பள்ளி திறப்பது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசை மீறலாமா என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா? என்றும், 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது என்றும், 9 லட்சம் மாணவர்கள் மட்டுமின்றி 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சற்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை முடிந்த பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்