தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சி? : எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

புதன், 29 நவம்பர் 2017 (13:45 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தனியாக ஒரு தலைமை செயலரை நியமித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு மத்திய அரசு அதிர்ச்சி அளித்திருக்கிறது.


 
தலைமை செயலகத்தில் ஏற்கனவே கிரிஜா வைத்தியநாதன் தலைமைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலாலுக்கு என தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜகோபாலை தலைமை செயலாளராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதில் முக்கியமானது என்னவெனில், கிரிஜா வைத்தியநாதனுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், ராஜகோபாலுக்கும் உண்டு என்பதுதான்.
 
சமீபத்தில் தமிழக ஆளுநர் அமைச்சர்கள் யாரும் இல்லாமல், கோவை சென்று அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அதற்கு, தமிழக அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி அரசோ அடக்கி வாசித்தது. அதில் ஏதும் தவறில்லை என அதிமுக அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேட்டியளித்தனர். 
 
அதோடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு வெறும் 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதனால், சட்டசபையில் அவருக்கு மெஜாரிட்டி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது திமுக தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் தமிழக அரசுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் எனத் தெரிகிறது.


 

 
எனவே, எப்படியும் எடப்பாடி அரசு விரைவில் கவிழும் என கணக்குப் போட்ட மத்திய அரசு, அதிக பட்சம் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு இணையாக, ஆளுநருக்கு தலைமைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு ஆண்டு பதவி காலம் அளிக்கப்பட்டுள்ளது.
 
மக்கள் அதிருப்தி, தினகரனின் குடைச்சல், ஓபிஎஸ் அணியில் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகள் காரணமாக ஏற்கனவே அதிமுக ஆட்சி ஸ்திரத்தன்மை இல்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்நிலையில், ஆளுநர் தனியாக ஆய்வு, அவருக்கெனெ தனி தலைமை செயலாளர் என மத்திய அரசு புது ரூட் போட்டு போய்க் கொண்டிருக்கிறது.
 
இந்த விவகாரம் ஆளும் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஆட்சியை நடத்தி வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்