சென்னையின் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இருந்தும் தமிழ்நாடு அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசுக்கு சொந்தமான, 'டிட்கோ' எனப்படும், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது.
புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு டிட்கோ விண்ணப்பித்தது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு தள அனுமதி வழங்கியுள்ளது.
கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் குழு, தமிழ்நாட்டில் உள்ள பரந்தூரில் உள்ள உத்தேச விமான நிலையத்திற்கு இட அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.