கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

Mahendran

வெள்ளி, 6 ஜூன் 2025 (14:55 IST)
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பேருந்துகள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்பாக பயணிகளிடையே கடும் ஆதங்கம் எழுந்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், நீண்ட நேரம் காத்திருப்பதால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர் என புகார்கள் எழுந்தன.
 
இந்த நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்  இதுகுறித்துவிளக்கம் அளித்துள்ளது.  மதுராந்தகம்–மேல்வருவத்தூர் சாலையில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியால்தான், சென்னையை நோக்கி பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
 
புதன்கிழமை இரவு, கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு எந்தவொரு பேருந்தும் இயக்கப்படாததால், 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நிறைய நேரம் காத்திருந்தனர். இதனால், இரவு 1 மணியளவில் 1,000-க்கும் மேற்பட்டோர் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
திடீர் மறியல் காரணமாக இருபுறம் 3 கிலோமீட்டர் வரையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் அங்கு வந்தடைந்து பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
சிங்கப்பெருமாள் கோயிலில் நடக்கும் திருவிழா மற்றும் வீதியுலா காரணமாக, அந்த பகுதி வழியாக பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், மாற்றுப் பாதை வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்