நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் வலைவிரித்துள்ளதாகவும், அந்த இடைத்தரகர் கேரளாவில் இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து சிபிசிஐடி போலீசார் கேரளா விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில், ஆள்மாறாட்டம் குறித்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபர் கேரளாவில் இருப்பதாகவும், அந்த இடைத்தரகர் உதித் சூர்யாவை போல் பல மாணவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்ய உதவியதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் மேலும் 5 மாணவர்கள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மும்பையைச் சேர்ந்த கும்பல் ஒன்று இந்த ஆள்மாறாட்டத்திற்கு உதவியதாகவும் வெளிவந்துள்ள தகவல்கள் நீட் தேர்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது