பெண் குழந்தைகளுடன் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார்!
புதன், 8 நவம்பர் 2023 (20:02 IST)
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் வளரக்கூடிய 100 பெண் குழந்தைகளுடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார்.
கோவை மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 'மோடியின் மகள்' எனும் இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இந்த தன்னார்வ அமைப்பின் சார்பில் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது:
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மோடியின் மகள் என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தபட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுடன் தீபாவளி பரிசுகளோடு தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது.
தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதால், தீபாவளி கொண்டாட்டம், பரிசுகளுடன், “குட் டச்” “பேட் டச்” குறித்து வகுப்புகள் எடுக்கப்படுகிறது. நடிகைகளை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி “டீப் பேக்” புகைபடம் தவறாக பயன்படுத்தபடுகின்றது.
இதில் பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது இதனால் அவமானபடுவது நாம் அல்ல.சரியான முறையில் உடனிருப்பவர்களுடன் பேசி,மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.
காவல் துறையில் தொழில் நுட்ப குழுக்களை பலப்படுத்த வேண்டும், சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தகவல் தொழில் நுட்ப சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசுடன் மகளிர் அணி தலைவராக என்ற முறையில் பேசிய உரிய முயற்சி எடுப்பேன். அதே போல குற்றங்களில் 50 சதவீதம் பெண்கள் வெளியில் சொல்வதில்லை என்பதால் குற்றவாளிகளுக்கு தைரியம் கிடைக்கிறது. கால விரயம் என்பதாலும் பெண்கள் செல்லுவதில்லை என கூறினார்.
மிசோரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிடுகின்றது. வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆதரவு உயர்ந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் இன குழுக்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளுக்கு பாஜக காரணமில்லை என அவர்களுக்கு தெரியும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் பட்டியலின மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. வேங்கை வயல் மாதிரியான நிகழ்வுகளுக்கு இது வரை தீர்வு இல்லை. பட்டியலின மக்கள் பாதுகாப்புக்கு திமுக பங்களிப்பு என்பது இல்லை. தமிழக அமைச்சரவையில் முக்கியத்துவம் இல்லாத துறைதான் பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஆர்.எஸ்.பாரதி அநாகரிகமாக பேசுவது என்பது தொடர்கின்றது. அவரது ஒவ்வொரு ஆபாச பேச்சுகளை திமுக தலைமை ரசிக்கின்றது. தொழில் துறையினருக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் . பா.ஜ.க தொழில் துறையினருக்கு ஆதரவாக இருக்கும்.
ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேச வேண்டும் என தமிழக அரசில் இருப்பவர்கள் நினைக்கின்றனர், அது நடக்காது. உங்கள் சித்தாந்தங்களை அவர் பேச வேண்டும் என நினைக்க கூடாது. அவர் சித்தாந்தை அவர் பேசுகின்றார். உங்கள் சித்தாந்ததை நீங்கள் பேசுங்கள். கவர்னரின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட கூடாது' என தெரிவித்தார்.