ஜெ. குறித்து வதந்தி பரவுவதற்கு அப்பல்லோ தான் காரணம்: ராமதாஸ்

சனி, 15 அக்டோபர் 2016 (17:38 IST)
முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தான் ஆஸ்பத்திரி அளிக்கும் தகவல்கள் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 24 நாட்கள் ஆகின்றன. ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது உடல்நிலை தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழக காவல் துறையும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.
 
அதைத் தொடர்ந்து வதந்தி பரப்புவதாக 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக காவல் துறையினர் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறை கூறும் காரணம் நம்பும்படியாக இல்லை.
 
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. கட்சி எல்லைகளைக் கடந்து அனைவருமே முதலமைச்சர் நலம்பெற வேண்டுகின்றனர். இவற்றைத் தாண்டி முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் ஒருகட்டத்தில் பரவின.
 
முதலமைச்சர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே அவரது உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதலமைச்சரின் உடல்நிலை என்பது விவாதத்திற்குரிய பொருளாக இல்லாமல், நலம்பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும். 
 
ஆனால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாளே முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார் என்று கூறிய ஆஸ்பத்திரி நிர்வாகம் தான், அடுத்த சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது, இன்னும் நீண்ட நாட்களுக்கு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்தது. இத்தகைய முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தான் ஆஸ்பத்திரி அளிக்கும் தகவல்கள் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது.
 
எனவே, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். முதலமைச்சரின் உடல்நிலை குறித்த உண்மைகளை அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கையாக தினமும் வெளியிட்டு முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதை அரசு தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்